tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

“உங்களுடன் ஸ்டாலின்” முகாமில்  மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் 

தஞ்சாவூர், ஜூலை 8-  கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக, பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழக முதல்வர் உத்தரவின்படி, மக்களின் குறைகளை தீர்க்க “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தில் நகர்ப்புறங்களில் 45 முகாம்கள், கிராமப் புறங்களில் 75 முகாம்கள் ஆக மொத்தம் 120 முகாம்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூலை 15 முதல், ஆகஸ்ட் 14 வரை  நடைபெறவுள்ளது.  நகர்ப்புறங்களில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், கிராமப்புறங்களில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளுக்கான மனுக்கள் பெற்று 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.  இம்முகாமில் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் மூலம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் இரண்டாம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக ஒவ்வொரு முகாம் நடைபெறும் இடத்திலும் தனியே நான்கு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு விண்ணப்பத்தினைப் பெற்று குடும்ப அட்டை எண், ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், IFSC Code, ஆகியவற்றை சரியாக பூர்த்தி செய்து அதன் அசலினை காண்பிக்க வேண்டும்.  “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தில், குடும்பத்தில் எவரேனும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெற்று வந்தாலும், அந்த குடும்பத்தில் தகுதியுடைய பெண்கள் இருந்தால் விண்ணப்பிக்கலாம். அரசு மானியத்துடன் கார், ட்ராக்டர் வாங்கியுள்ள குடும்பத்தில் தகுதியுடைய பெண்கள், மகளிர் உரிமை தொகை பெற முகாமில் விண்ணப்பிக்கலாம்.  இத்திட்டங்கள் குறித்து நகர்ப்புற, கிராமப்புற அமைப்புகளின் மூலம் நடைபெறும் பகுதிகளில் தன்னார்வலர்கள் ஜூலை 6 முதல் வீடுதோறும் சென்று திட்டத்தினை விளக்கி, வீட்டிற்கு ஒரு துண்டுப்பிரசுரம் மற்றும் ஒரு விண்ணப்பம் மட்டுமே கொடுப்பார்கள்.  பொதுமக்கள் தங்களது கோரிக்கையை வழங்கப்பட்ட விண்ணப்பத்தில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பத்தை முகாம் நடைபெறும் நாளன்று சென்று கொடுத்து ஒப்புகைசீட்டு  பெற்றுக்கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

போலியாக நடத்தப்படும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க  மாவட்டக் கல்வி அலுவலரிடம் மாணவர் சங்கம் புகார் 

மயிலாடுதுறை, ஜூலை 8-  மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள விளந்திட சமுத்திரம் பகுதியில் ஸ்ரீ பத்மாவதி மழலையர் தொடக்கப்பள்ளி என்ற பெயரில், போலியாக நடத்தப்படும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலரிடம், இந்திய மாணவர் சங்கத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.  சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அமுல் காஸ்ட்ரோ கையொப்பமிட்டுள்ள அந்த புகார் மனுவில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்திற்குட்பட்ட விளந்திட சமுத்திரம் 53. மருதநாயகம் காலனி தெரு, தோல் மண்டி அருகே உள்ள ஒரு வீட்டில் ஸ்ரீ பத்மாவதி மழலையர் தொடக்கப்பள்ளி என்ற பெயரில் போலியாக வேறொரு பள்ளியின் அங்கீகாரம் எண் மற்றும் EMIS எண்ணுடன் ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் என்பவருடைய பதவி அதிகாரத்தை பயன்படுத்தி இப்பள்ளி செயல்படுகிறது.  மேலும், பள்ளி கல்வி துறையில் EMIS தரவுகளில் சீர்காழி வட்டாரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள பள்ளி பெயரே இல்லை. அதேபோல் இப்பள்ளியில் கல்வி துறையின் வழிகாட்டுதலின்படி, உரிய கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் காற்றோட்ட வசதிகள் எதுவும் இல்லாமலும் ஒரு அறைக்குள் குழந்தைகளை அடைத்து வைத்து நடத்தப்படுகிறது. இதனால், இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் உள்ளது. அங்கீகாரம் இல்லாத பள்ளியில் RTE சேர்க்கை நடைபெறுகிறது. என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. எனவே, போலியாகவும் மற்றொரு பள்ளியின் அங்கீகார எண்ணை பயன்படுத்தியும், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் பள்ளியின் மீதும், பள்ளியின் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுத்திட இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்வதாகக்  குறிப்பிடப்பட்டுள்ளது.